இந்திய அரசியல் அமைப்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, இந்திய அரசாங்கத்தின் பலம் பொருந்திய மத்திய அமைச்சரவை; நாடாளுமன்ற அவைகள்; மாநிலங்களின் அமைச்சரவை; சட்டமன்றம் இவற்றிற்கு எந்த வகையிலும் குறையாத தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு தான், உள்ளாட்சி அமைப்பு.
இதனால் தான் ஊராட்சி மன்ற கிராம சபைக் கூட்டங்களில், மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு மாநில அரசு உதவியாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை எப்படியாவது மாற்றியமைத்து இந்திய அரசியலமைப்பால், உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும் என சில நேரங்களில் அரசு அலுவலர்கள் நினைக்கின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ராமு, கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். மனுவில், 'எங்கள் ஊராட்சி மன்றத்தில் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊராட்சி மன்றத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மன்ற உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல், வட்டார வளர்ச்சி அலுவலர் (சிறப்பு அலுவலர்) தாமாகவே ஊராட்சிக்கு உட்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தை (Tender Notification) வழங்கியுள்ளார். இதனால், இதனை ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எப்போது ஊராட்சி மன்றத்திற்கான (ஜனவரி 6, 2020) உறுப்பினர்கள் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார்களோ, அப்போதே அது ஒரு தன்னாட்சி அமைப்பாக மாறி விடுகிறது. அதனை ஒரு மன்றமாகவே கருத வேண்டும். எனவே, வட்டார வளர்ச்சி அலுவலரின் பணி ஒப்பந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.