தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், கடந்த ஜுன் மாதம் 23ஆம் தேதி சென்னையில் நடந்தது. பல்வேறு காரணங்களுக்காக இத்தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை, பெஞ்சமின் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், வழக்குகள் முடிவடையும் வரை அல்லது ஒரு ஆண்டிற்கு, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க, பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தனி அதிகாரியாக நியமித்து, மாநில அரசு கடந்த நவம்பர் 6ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஷால் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று நாடியது.
அதனடிப்படையில், நடிகர் சங்க முன்னாள் பொருளாளர் கார்த்தி சார்பில், 'நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், தனி அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் மட்டும் அளித்த புகாரின் அடிப்படையில், தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமானது. எனவே,தமிழ்நாடு அரசின் உத்தரவுக்குத் தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், இவ்வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.