சென்னை:கோயம்புத்தூர், தியாகி குமரன் சந்தை பகுதி இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் வியாபார மையமாக விளங்கியது. இந்த மார்க்கெட் பகுதிகளில் மாமூல் வாங்கும் காவலர்களுக்கும் அல்-உம்மா என்ற அமைப்புக்கும் பிரச்சினை உருவானது. அல் உம்மா அமைப்பு மாமூல் தர மாட்டோம் என காவல் மேலதிகாரியைச் சந்தித்து, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் மாமூல் வசூல் செய்து வந்த காவலர்கள் அல் உம்மா என்ற அமைப்பின் மீது கோபம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு நாள் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் வாகனத்தில் சென்ற போது செல்வராஜ் என்ற காவல் அதிகாரி, அவர்களை ஓட்டுநர் உரிமம் இல்லை என காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த அன்சாரி என்பவரை அவமானப்படுத்தியதாக வதந்தி பரப்பப்படுகிறது.
இதனால் காவல் அதிகாரி செல்வராஜ், கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை அடுத்து காவலர்கள் தங்களின் குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்கள் கலவரமாக மாறிய நிலையில் 1998 பிப்ரவரி 14 தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. கோவை மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், கடைவீதி, வணிக வளாகம், பேருந்து நிலையம், உக்கடம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இந்த கலவரத்தால் நான்கு நாட்களில் மட்டும் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன, 58 பேர் உயிரிழந்தனர். மேலும் 252 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பினால் பல கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம், தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.