இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தொற்று மக்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால் முகக்கவசங்களுக்கான தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதில் பல்வேறு வகையான முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அதன்படி, கரோனாவை எதிர்த்துப் போராடும் முன்கள வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் என்-95 முகக்கவசங்களைப் போலவே தயாரிக்கப்பட்ட வால்வுகள் பொருத்திய முகக்கவசங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், வால்வுகள் பொருத்திய என்-95 முகக்கவசங்கள் கரோனா பாதிப்பைத் தடுக்காது என்பதால், அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உரிய நேரத்தில் மருந்துகளை அனுப்பி உதவிய துணை ஆட்சியர்!