சென்னை:தமிழ்நாடு, புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் 239 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெல்டா மாவட்டங்களை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதியில் எண்னெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நோக்கில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் (M/s Vedanta Limited(Division Cairn Oil & Gas) சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு Open Acreage Licensing Policy (OALP) எனும் ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் 1613.28 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட CY-OSHP-2017/1 என்கிற பகுதியிலும், 2291.34 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட CY-OSHP-2017/2 என்கிற பகுதியிலும் எண்ணெய், எரிவாயு எடுக்கும் உரிமத்தைப் பெற்றிருந்தது.
சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்னப்பம் செய்துள்ளது வேதாந்தா நிறுவனம். குறிப்பாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் 102 ஆய்வுக் கிணறுகளும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில் 137 ஆய்வுக் கிணறுகளும் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்தக் கிணறுகள் அமைப்படுவதால் கடற் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளாமலே இக்கிணறுகள் அமைக்கப்படவுள்ளது என்பதுதான் மிகவும் கவலையளிக்கக்கூடிய விஷயமாகும் என அமைப்பின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.