தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தல்; பிரிண்டர் பிரச்னை.. எமிஸ் பணிகளுக்கு இடையே இதுவுமா? - ஆசிரியர்கள் குமுறல்!

Government School teacher's problems: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்வதற்காக திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு முறையாக கற்பிக்க முடியவில்லை என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கற்றல் திறன் மதிப்பீட்டு தேர்வு குறித்து ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
கற்றல் திறன் மதிப்பீட்டு தேர்வு குறித்து ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 9:40 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தது என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய, ஒவ்வொரு மாதமும் அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்வதற்காக திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் என மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான 'மாநில மதிப்பீட்டுப் புலம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்துவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு (Learning Outcome / Competency Based Test) நடத்திட வேண்டும்.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக, பிற்பகல் 2 மணி முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி சேவையை ஆசிரியர்கள் பயன்படுத்தலாம். தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பிரிண்டரைப் பயன்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் (Learning Outcome/Competency Based Test) தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யும் வகையில், 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி, அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் தவறாமல் நடத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக, அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

எவ்விதக் குறுக்கீடும் இன்றி, மாணவர்கள் தாங்களாகவே விடையை எழுதுவதை தலைமையாசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மீண்டும் பெற்று, மதிப்பெண் போட்டு வகுப்பாசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.

தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இந்த வினாத்தாள்களில் இடம் பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து, தாங்கள் கற்பிக்கும் பாடத்தின்போது, அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome / Competency Based Test) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். https://exams.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத அரசுப் பள்ளிகள், வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்தலாம். வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத அரசுப் பள்ளிகள், UDISE பதிவெண்ணையும், அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “ மாணவர்களுக்கு நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வு மதிப்பெண்களால் எந்தவித பலனும் ஏற்படுவதில்லை. ஏற்கனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாங்கள் நடத்திய பாடத்தில் இருந்து மாதந்தோறும் தேர்வு நடத்தி வருகின்றனர்.

இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் இணையதளம் மூலமாக அனுப்பப்படும் எனவும், அதனை பள்ளிகளில் உள்ள பிரிண்டரைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுத்து மாணவர்கள் தேர்வு எழுதிய பின்னர், ஆசிரியர் விடைத்தாளை திருத்தி மார்க் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பிரிண்டரைப் பயன்படுத்தி கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், அதிக அளவில் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இது பெரிய அளவில் சாத்தியமில்லாத திட்டமாகவேத் தெரிகிறது.

பிரிண்ட் எடுப்பதற்கான பேப்பர் மற்றும் பிரிண்டர் அனைத்து பள்ளிகளிலும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. ஆசிரியர்கள் எமிஸ் பணி செய்யவே நேரம் இல்லை என்பதாலும், மாணவர்களுக்கு முழுவதும் கற்பிக்க முடியவில்லை.

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கற்பிக்கத் தேவையான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டு வழங்கிய கால அட்டவணைப்படி, பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடித்திருக்க வேண்டும்.

பல்வேறு பள்ளிகளில் பிரிண்டர்கள் சரியாக வேலை செய்யாத நிலையில், வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுப்பது முடியாத செயல். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில், ஆண்டு துவக்கத்தில் பேப்பர் வாங்குவதற்கான சிறிய தொகை அளிக்கப்படுகிறது, அந்த தொகை போதுமானதாக இருக்காது.

உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடமே கற்பிக்க நேரம் ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வு என பல்வேறு வகையில் கூறி வருவதால், கற்பித்தல் பணி முற்றிலும் பாதிக்கப்படுகிறது ” என குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details