சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் 'மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்' என்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "அண்மையில் திமுக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஆனது பொய் மூட்டைகளை கொண்டதாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் தற்போது வரை மேம்படுத்தவில்லை.
இதற்கான உரிய நீதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை. திமுக கொண்டு வந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி வந்த நிலையில் அது குறித்து எந்தத் தகவலும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மத்திய அரசு வழங்கிய நிதி குறித்து முழுமையாக மறைத்து கூறுகிறது திமுக அரசு. நான் முதல்வர் திட்டம் எதற்கு?.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு நிறுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் காரணமாக 2021-22 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுகிறன. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மதுரவாயல் துறைமுகம் இரண்டடுக்கு சாலை தேவை இல்லாதது என தெரிவித்த நிலையில், தற்போது இந்த திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை:விருதுநகர், வேலூரில் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றங்கள் கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை திமுகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் தமிழ்நாட்டிற்கு நிதி சேகரிக்கவா அல்லது அவரது குடும்பத்திற்கு நிதி சேகரிக்கவா என்று தெரியவில்லை" என்றார்.
இதையும் படிங்க:அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை!