சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் மூலமாக எஸ்.எம்.எஸ் அனுப்பி பண மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டில் 14 புகார்கள் மற்றும் 2023ஆம் ஆண்டில் 11 புகார்கள் பெறப்பட்டு, அது தொடர்பாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் குறுஞ்செய்தி மூலம் பணமோசடியில் ஈடுபடும் நபர்களைத் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வசிக்கும் முத்துக்கருப்பன் என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு 25.02.2020ஆம் தேதி அறிமுகமில்லாத எண்ணிலிருந்து தங்களது வங்கி கணக்கு பிளாக் செய்யப்படப்போவதாகவும், அதனால் PAN CARD இணைக்குமாறும் ஒரு குறுஞ்செய்தி வருகிறது.
அந்த குறுஞ்செய்தியில் வந்த Linkஐ கிளிக் செய்து அவரது ID, PASSWORD, MOBILE NUMBER ஆகிய தகவல்களை பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு OTP வருகிறது. அந்த OTP எண்ணை பதிவு செய்தவுடன் அவரது கணக்கில் இருந்து ரூ.99,887 பணம் மோசடியாக திருடப்பட்டது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குறுஞ்செய்தி அனுப்பிய சிம்மின் முகவரி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட MOBILE PHONE பற்றி தகவல் சேகரிக்கப்பட்டதில், அதே மொபைல் போனில் ஒரே நாளில் 40 சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதனுடைய டவர் லொக்கேஷன் ஆய்வு செய்யப்பட்டு கோயம்புத்தூர், பீளமேடு பகுதி சென்று விசாரித்ததில் ’சிக்கா மார்க்கெட்டிங்’ என்ற பெயரில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணன் (வயது 52) மற்றும் அவரது மனைவி பாரதி (வயது 44) இருவரும் பல வருடங்களாக மோசடி குறுஞ்செய்தி அனுப்பும் தொழிலை செய்தது தெரியவந்தது.
இவர்கள் நாச்சிபாளையத்தைச் சேர்ந்த ஏஜெண்டுகள் ராம் குமார் (வயது 29) மற்றும் காரமடையைச் சேர்ந்த வினோத் குமார் (வயது 31) ஆகியோர் மூலமாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சானவாஸ் (வயது 22), உமர்முகமது (வயது 19), பரத் பாலாஜி (வயது 30), திருச்சியைச் சேர்ந்த ஜெயராம் (வயது 39), தூத்துக்குடியைச் சேர்ந்த மாரீஸ்வரன் (வயது 23), பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 32), தென்காசியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 48) ஆகியோர்களிடமிருந்து சுமார் 6,000 போலி சிம்கார்டுகளை விலைக்கு வாங்கியுள்ளனர்.