சென்னை:திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான், கடந்த 2022 டிசம்பர் 22ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவம் நடந்த அன்று, அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், மஸ்தான் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் காரின் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, அவர்களிடம் செல்போன் உரையாடல் குறித்தும் விசாரிக்கப்பட்டது. அப்போது, மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உயிரிழந்த முன்னாள் எம்பி மஸ்தானின் தம்பியான கவுஸ் ஆதம் பாஷாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்னையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும், 5 லட்சம் ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை (மஸ்தான்) கொன்றதாக காவல் துறையினரிடம் மஸ்தானின் தம்பி வாக்குமூலம் அளித்தார்.