பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவர் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், 2002ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளைக்காக அன்பரசு ரூ.35 லட்சம் கடன் வாங்கியதாகவும் அதற்காக தந்த காசோலை கணக்கில் பணம் இல்லாததால் திரும்பிவிட்டதாகவும் குறிப்பிட்ட போத்ரா, காசோலை மோசடி சட்டத்தின் கீழ் அன்பரசு, அவரது மனைவி உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
காசோலை மோசடி வழக்கு: முன்னாள் எம்.பி.க்கு சிறை உறுதி!
சென்னை: காசோலை மோசடி வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் எட்டாவது பெருநகர நீதிபதி - அன்பரசு, அவரது மனைவி கமலா, அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் அறக்கட்டளை நிர்வாகிகள் எட்டு பேர் ரூ.35 லட்சமும் அதற்கு ஆண்டிற்கு 9 விழுக்காடு வட்டி அளிக்குமாறும் 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அன்பரசு மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி, நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. அன்பரசு மனைவி இறந்துவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ், கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தும் இருவரையும் உடனடியாக சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.