இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50-க்கு கண்ணைக் கட்டும் அளவிற்கு உயர்த்தி – சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு இல்லத்தரசிகளுக்கு ஒரு 'அதிர்ச்சி'ப் பரிசை அளித்து விட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டிசம்பர் மாதத்தில், தலா 50 ரூபாய் வீதம், இரு முறை 100 ரூபாய் அதிகரிப்பு - பிப்ரவரி மாதத்தில் இரு முறை 75 ரூபாய் அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த விலை உயர்வுகளால், காய்கறி முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் மனம் போன போக்கில் ஏறுகின்றன. போக்குவரத்துக் கட்டணம் உயருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்குகின்றன.