சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் இரண்டு சிறுவர்கள், கடையில் நெகிழிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்து ரத்த வாந்தி எடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறுவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
ரத்த மாதிரிகள் பரிசோதனை
அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து, குளிர்பானத்தின் தரத்தை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
மேலும் சிறுவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அதில் என்ன வகையான ரசாயனம் உள்ளது என்பதை கண்டறிய வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே குளிர்பானத்தைக் குடித்து, சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு
இந்நிலையில் சிறுவர்கள் குடித்த குளிர்பானம் விற்பனை செய்யப்பட்ட கடையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், நியமன அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்த குளிர்பானங்கள், காலாவதியான குளிர்பானங்கள், மாவு பாக்கெட்கள் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஸ்குமார் கூறியதாவது, 'குளிர்பானம் குடித்து சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்த நிலையில், சிறுவர் குடித்த குளிர்பானத்தை பரிசோதனைக்காக ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டோம். மேலும் தற்போது கடையில் ஆய்வு செய்து காலாவதியான குளிர்பானங்கள், காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள், மாவு பாக்கெட்களைப் பறிமுதல் செய்துள்ளோம்.