தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2021, 11:33 AM IST

ETV Bharat / state

மருத்துவர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறைத் தேட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவு

கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை, வேலங்காடு மயானத்திலிருந்து தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exhumation of COVID victim doctor Simon body from velangadu, MHC order
Exhumation of COVID victim doctor Simon body from velangadu, MHC order

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம், வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். ஆனால், சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து மே 2ஆம் தேதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று (மார்ச்.31) தீர்ப்பளித்துள்ள நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமனின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டும், போலீஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும், அடக்கம் செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மருத்துவர் சைமனின் உடலை மீண்டும் அடக்கம் செய்யவும் தனது தீர்ப்பில் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details