தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேர்வர்கள் முறைகேடுகளுக்கு துணை போக வேண்டாம்!' - டிஎன்பிஎஸ்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்கள் சமூக பொறுப்புணர்ந்து எவ்விதமான முறைகேடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

examinees try not to involve in any scams - tnpsc
டிஎன்பிஎஸ்சி

By

Published : Jan 31, 2020, 7:49 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடந்த சில நாள்களாக பல்வேறு யூகங்களுக்கு இடமளிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

குரூப் 4 தேர்வு விரைவில் கலந்தாய்வு

2019ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தகவல் அறிந்தவுடன் தேர்வாணைய தலைவர், உறுப்பினர்கள் அடங்கிய குழுமம் தானாக முன்வந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்து செயலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை அறிவுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து கள ஆய்வுப் பணிகள், ஆவணங்கள் ஆய்வு, நேரடி விசாரணைகள் மூலம் தவறுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மீள் விசாரணைக்கு என ஒப்படைக்கபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் கலந்தாய்வுக்கு விரைவில் அழைக்கப்படுவர்.

குரூப் 2-ஏ தேர்வு காவல்துறையில் புகார்

இதேபோல் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2-ஏ பணிகளுக்கான தேர்விலும் தவறு நடந்துள்ளது என தகவல்கள் வெளியானவுடன் தலைவர், உறுப்பினர்கள் உள்ளடக்கிய தேர்வு ஆணையக் குழுமம் கவனமுடன் ஆராய்ந்து தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளது. தேர்வு குறித்தும் விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய ஆவணங்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வை பொருத்தவரை முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பு போக்குவரத்துத் துறை மூலமாக செய்யப்பட்டது.

அந்த துறை அளித்த விபரங்களின் அடிப்படையில் 33 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றம் போக்குவரத்துத் துறை நடத்திய முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாக கூறி இந்த பணியை முழுவதும் மறு ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்து எவ்வித ஐயப்பாடும் எழுப்பப்படவில்லை.

பொறியியல் தேர்வு விதிப்படி நடந்துள்ளது

அதேபோல் தற்போது நடந்து முடிந்துள்ள ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வு முடிவுகளில் அடுத்தடுத்த பதிவுகளைக் கொண்ட தேர்வர்கள் தஞ்சாவூர் தேர்வு மையத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்தும் தேர்வாணையம் தீவிர ஆய்வு மேற்கொண்டது.

இந்தச் செய்தியில் வெளிவந்துள்ள பதிவுகள் அனைத்தும் வேளாண் பொறியியல் தேர்வர்களுடையதாகும். தேர்வில் அரசு விதிகளின்படி இளநிலை பொறியாளர் பதவி, வேளாண் பொறியியல் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை பதவியாகும். வேளாண் பொறியியல் படித்த தகுதியான தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே இதர பொறியியல் மாணவர்களுக்கு இப்பணியில் இடம் அளிக்கப்படும். தேர்வு முடிவுகளில் மற்ற பொறியியல் படித்தவர்களை காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் வேளாண் பொறியியல் பட்டம் பெற்ற தேர்வர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். எந்தவிதமான தவறுகளும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வில் முறைகேடு இல்லை 2019இல் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தேர்வாகியுள்ள முதல் இரண்டு இடங்களைப் பெற்ற தேர்வர்கள் குறித்தும், தேர்ச்சி பெற்ற 181 தேர்வர்களில் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் என செய்தி வெளிவந்துள்ளது. இந்த சந்தேகங்களை தேர்வாணையம் கவனமுடன் ஆராய்ந்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து அதனடிப்படையில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என உறுதிபட தெரியவருகிறது. இந்த தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் பல்வேறு பயிற்சி மையங்கள் தங்களின் தேர்வு மையங்களில் படித்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளவர்களின் எண்ணிக்கை 300 தாண்டும்.

முறையான புகார்கள் பெறப்படாமல் வந்த செய்திகளின் அடிப்படையில் விசாரணை செய்து தகுந்த முகாந்திரம் இருக்கும் இடங்களில் உரிய விசாரணைக்கு ஆவண செய்துள்ளது.

புகார்கள் மீது நடவடிக்கை

இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட புகார்கள்,செய்திகள் தேர்வாணையத்தின் கவனத்திற்கு வரும்பொழுது அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதுடன் வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தேர்வாணையம் உறுதியாக உள்ளது.

நம்பிக்கை வையுங்கள்

தேர்வர்களும் தங்கள் சமூக பொறுப்புணர்ந்து நேர்மையான வழிகளில் மட்டும் தேர்வினை எதிர்கொள்ளவும் அவர்களும் எவ்விதமான முறைகேடுகளுக்கும் துணை போகாமல் இருக்கும்படியும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும், இதுகுறித்த தகவல்கள் தெரிய வரும்போது தேர்வாணையத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.

தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகளின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் மட்டுமின்றி வேறு எந்த தவறும் நடக்காத வகையில் தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்

ABOUT THE AUTHOR

...view details