சென்னை: இன்று (23.09.2022) சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற “தொகுப்பு நிதியின் மாநில நிர்வாகக் குழு” கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
முன்னாள் படைவீரர் நலனில் காட்டிய முன்முயற்சி மற்றும் தனிப்பட்ட நலன்களுடன், முன்னாள் ராணுவ வீரர்களின் நலனை உறுதி செய்வது குறித்தும், முந்தைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் குறித்தும் விவாதிக்க ராஜ்பவனில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், 2014-15 நிதியாண்டு முதல் 2021-22 வரையிலான தொகுப்பு நிதியின் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகள் மற்றும் அறிக்கை மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் விவாதிக்கப்பட்டன.
மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் பல்வேறு பிரச்னைகள், அவர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தை (ECHS) மேம்படுத்துதல், கல்வி உதவித்தொகை மானியம் மற்றும் பிற பணப் பலன்களை அவர்களது வாரிசுதாரர்களுக்கு அளித்தல், மாவட்ட அளவில் ‘ஜவான்ஸ் பவன்’ அமைத்தல் போன்றவை விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
1. போரில் உயிரிழப்போரின் உறவினருக்கு வழங்கப்படும் (NOK) உதவித்தொகையை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், போரில் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 50,000-இருந்து ரூ. 1,00,000/- ஆகவும் உயர்த்துதல்.
2. முன்னாள் படைவீரர்கள்,விதவைகளின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முன்னாள் படைவீரர் குழந்தைகள் கல்வியறிவு மேம்பாட்டு உதவித்தொகையை உயர்த்துதல்
உயர்த்தப்பட்ட உதவித்தொகையின் படி
1 முதல் 5ஆம் வகுப்பு
2,000
6 முதல் 8ஆம் வகுப்பு
4,000
9 & 10ஆம் வகுப்பு
5,000
11 & 12ஆம் வகுப்பு
6,000 வழங்கப்படும்.
3. ஐஐடி/ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிகளில் படிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மற்ற உதவித்தொகைகளுடன் சேர்த்து ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை.