இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி: 20 சதவிகித இடஒதுக்கீடு முறை ரத்து! - இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி
2019-06-26 16:05:06
சென்னை: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 20 சதவிகித இடஒதுக்கீடு முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரை சேர்ந்த ரித்திகா என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்பு நீட் தேர்வில் தகுதி பெற்று மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் தான் பெற்ற மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இஎஸ்ஐ நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 20 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எனவே அந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும், நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே 20 சதவிகித மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தைகளுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதம் என்றும், ஏற்கனவே சேர்க்கப்பட்டவர்களை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் அதே வேளையில் இந்த கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே முழுமையான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.