தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவிழாக்களில் மின்சார திருட்டு - யார் பொறுப்பேற்பது?

கோவில் திருவிழாக்களின் போது, மின் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டிற்கு, கோவில் நிர்வாகிகளும், அறங்காவலர்களும் பொறுப்பாக இருக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

electricity-stolen-for-temple-festival-liability-will-have-to-be-fastened-temple-trustees-and-executive-officers-mhc
கோவில்விழாக்களில் மின் திருட்டு குற்றச்சாட்டு - கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் தான் பொறுப்பு

By

Published : May 29, 2023, 4:00 PM IST

சென்னை:விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, தகரத்திலான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

மின் விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த ஒயர்கள் அறுந்து தகரத்தின் மீது பட்டதால், வரிசையில் நின்றிருந்த தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ராணி, பச்சையம்மாள், முருகன், திருக்கழுக்குன்றம் ரவி உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், 37 பேர் படுகாயமடைந்து செஞ்சி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, விழாவுக்கு ஒலி ஒளி ஏற்பாடு செய்திருந்த சவுண்ட் சர்வீஸ் ராஜா மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது வளத்தி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சவுண்ட் சர்வீஸ் ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து,கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மற்றவர்கள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை ரத்து செய்து தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தரமற்ற மின்வயர்கள் பயன்படுத்தியதால் அவை அறுந்து, தகரத்தில் விழுந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மின் ஒப்பந்ததாரர் என்ற முறையில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களுக்கு மனுதாரர் ராஜா தான் முழு பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.

சவுண்ட் சர்வீஸ் ராஜா தரப்பில் கோவில் நிர்வாகத்தினரும், அறங்காவலர்களும் வலியுறுத்தியதால் தான் தரமற்ற ஒயர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்த நிலையில், தங்கள் குழுவை சேர்ந்தவர்கள் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு பிறகு தண்டிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், மின் திருட்டு குற்றச்சாட்டில் கோவில் நிர்வாகிகளும், அறங்காவலர்களும் பொறுப்பாகி இருக்க வேண்டிய நிலையில், குற்றப்பத்திரிகையில் அவர்களது பெயர்கள் சேர்க்கப்படாமல், சவுண்ட் சர்வீஸ் நபர்களை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை, விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்

இந்த வழக்கை பொறுத்தவரை, மரணம் விளைவிக்கும் நோக்கத்துடன் சவுண்ட் சர்வீஸ் ராஜா செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை எனவும், கவனக்குறைவாக மரணம் ஏற்படுத்தியதாகத்தான் கூறமுடியும் என கூறி, 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, ஏற்கனவே சிறையில் இருந்த 119 நாட்கள் சிறை தண்டனையே போதுமானது என தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம், 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்தும் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details