தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வணிகர்கள் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.20 லட்சம் நிதியுதவி!
16:52 June 24
தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச்சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் உடல்களைப் பெறாமல் அவர்களது உறவினர்கள் நேற்று முழுவதும் போராடிவந்தனர். மேலும், அவர்களைச் சித்ரவதை செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இச்சூழலில் அவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும், அக்குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசின் விதிமுறைகள், தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடற்கூறாய்வில் தாமதம்: நீதிபதியிடம் உறவினர்கள் கோரிக்கை!