சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "பிரதமர் இதுவரை மூன்று முறை தொலைக்காட்சியில் பேசி இருக்கிறார். ஆனால், நோய்க்கான மருந்து, மக்களுக்கான நிவாரணம் பற்றி அறிவிக்கவில்லை. இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர்.
முழு அடைப்பால் அவர்கள் உணவின்றி, வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான உணவுக்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும். இதனை அரசு செய்ய முன்வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதை வன்மையாக கண்டிக்கிறது. இவர்களுடைய வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம் அரசு செலுத்தினால் எந்த பிரச்னையும் இல்லாமல் ஊரடங்கு வெற்றி பெறும்.
தமிழ்நாட்டிலும் மாநில அரசாங்கம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், பாதி இடத்திற்கு மட்டும்தான் அந்தப் பணம் போய் சேர்ந்துள்ளது. விவசாயிகளும் அவர்களுடைய கொள்முதல்களை எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகள் விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்ல அரசு உதவி செய்ய வேண்டும். உழைப்பை நம்பி இருக்கின்ற மக்களுக்கு மருத்துவமும், நிவாரணமும் அளிக்க வேண்டும்.
ராபிட் டெஸ்ட் கருவி ஒன்பதாம் தேதி வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் இன்று வரை வரவில்லை. இந்த அரசு நிர்வாகம் எவ்வளவு செயலிழந்து இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். மருத்துவம் என்பது மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யலாம். இதில், மத்திய அரசு ஏன் தலையிடுகிறது என்பது புரியவில்லை. நம்முடைய முதலமைச்சரும் இதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்.