தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இதனால் இரண்டு தொகுதிகளையும் வென்று மக்களிடம் தங்களுக்கு இன்னும் ஆதரவு உள்ளது என்று காட்ட அதிமுகவும், தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க திமுகவும் வேட்டியை மடித்து கட்டி களத்தில் குதித்துள்ளன. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் விக்கிரவாண்டி தொகுதியில் பணியாற்ற அதிமுகவில் 28 மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாங்குநேரி தொகுதிக்கு அதிமுகவின் 27 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணியாற்றிவருகின்றனர்.
இந்த பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆகியோரின் சந்திப்பு கடந்த 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்றதால், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தேர்தல் பரப்புரைக்குச் செல்ல முடியவில்லை.