சென்னை:மலேரியா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள லேப் டெக்னீஷியன்கள் பழிவாங்கப்படுவதை தடுத்திட வேண்டும் எனவும்; சிறுநீரக டயாலிசிஸ் நுட்புநர்களுக்கு பணி நீட்டிப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்குவதுடன் அவர்களது ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என அரசுக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச் சங்கங்களின் சார்பில் ரவீந்தரநாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், “மலேரியா தடுப்புப்பணியின் போது, மலேரியா பரவுகிறதா என்பதைக் கண்டறிய, வீடு வீடாகச் சென்று ரத்த மாதிரிகள் பொதுமக்களிடமிருந்து எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளும்போது, ஏற்படும் குளறுபடிகளைக் காரணம் காட்டி ஆய்வக நுட்புநர்கள் (Lab technicians) பழிவாங்கப்படுகின்றனர். அவர்கள் பணி இடமாறுதல் செய்யப்படுகின்றனர்.
17 ஏ மற்றும் 17 பி பிரிவின்கீழ் குறிப்பாணைகளும் (Memo) அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக சுகாதாரத்துறை ரத்து செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்புநர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மலேரியா பரவலைக் கண்டறிவதற்கு இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். மலேரியா பாதிப்பை கண்டறிய நவீன தொழில் நுட்பத்தைக் கையாள வேண்டும். ஒரு ஆய்வக நுட்புநர் மாதம்தோறும் சுமார் 400 நோயாளிகளின் சிலைடுகளை (Slides) பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏறத்தாழ 5000 லேப்டெக்னீசியன்கள் ஆண்டுக்கு 99 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைடுகளை பரிசோதனை செய்கின்றனர்.
காசநோய் பதிவேடு, எச்ஐவி பதிவேடு, மலேரியா பதிவேடு, தரநிர்ணய பதிவேடு, சர்க்கரை நோய் பதிவேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஆவணங்களில் விவரங்களை தினத்தோறும் பதிவு செய்யும் வேலையும் உள்ளது. மலேரியா தடுப்புப் பணிக்கென்று புதிதாக ஆய்வக நுட்புநர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு டயாலிசிஸ் டெக்னீசியன் பயிற்சி பெற்றவர்கள், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
292 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 360 நுட்புநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 160 நுட்புநர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டு 155 பேர் பணி புரிகின்றனர். மீதமுள்ள 132 நுட்புநர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தற்போது பணியில் உள்ள 155 டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கு ஓராண்டு பணி இன்றுடன் நிறைவு பெறுவதால், அவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்குவதோடு, பணி நிரந்தரமும் வழங்கிட வேண்டும்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களை முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், வெளி கொணர்தல் முறையில் (Out Sourcing) குறைவான ஊதியத்தில் பணிநியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவை கைவிட்டு, இவர்களை நிரந்தர அடிப்படையில் பணியில் நியமிக்க வேண்டும். 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் அரசு மருத்துவமனைகளில் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்பது வேதனையோடு குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, டிசம்பம் 7ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மருந்துக் கடைகளில் இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுவதையும், சிகிச்சைகள் வழங்கப்படுவதையும் தடுத்திட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பழைய ஓய்வூதிய திட்டம்: அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஊழியர்கள்!