சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் இன்று (ஜன.19) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சுத்திணறல் காரணமாக இன்று மறைந்தார்.
சாந்தாவின் உடல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், நடிகர்கள் சித்தார்த், விவேக், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டின் அன்னை தெரசா
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: ’மறைந்த சாந்தா உயிரிழப்பு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட தமிழ்நாடு அரசு துணை நிற்கும். டாக்டர் முத்துலட்சுமி போன்று தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் இவரது பெயரை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்’என்றார்.
மருத்துவர் சாந்தா உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ’மருத்துவர் சாந்தா புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி செய்தவர். புற்றுநோய் மருத்துவத்தில் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவருடைய ஆன்மா சாந்தி அடையவேண்டும். அன்னாரின் இழப்பு தேசத்திற்கு பெரிய இழப்பு’ என வருத்தம் தெரிவித்தார்.
மருத்துவர் சாந்தா பண்பாகவும் பாசமாகவும் பழகக்கூடியவர் என புகழாரம் சூட்டிய அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனன், கடந்த2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மருத்துவர் சாந்தாவுடன் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் எனக் கூறினார்.
மருத்துவர் சாந்தாவை கண்ணீருடன் வழியனுப்பும் பொதுமக்கள் இன்று காலை முதல் மாலை வரை பெரும்பாலானோர் மறைந்த மருத்துவர் சாந்தாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 5 மணியளவில் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறையின் அணிவகுப்புடன் அமரர் ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவர் சாந்தா உடலுக்கு இறுதி மரியாதை மறைந்த புற்றுநோய் மருத்துவரின் சேவையினை கௌரவிக்கும் விதமாக காவல்துறையின் மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதன் பேரில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயான பூமியில் 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை