தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 18, 2023, 7:00 PM IST

Updated : Feb 18, 2023, 7:07 PM IST

ETV Bharat / state

சிவசேனா விவகாரம் அதிமுகவுக்கு பொருந்துமா? ஈபிஎஸ் வசமாகிறதா அதிமுக? முழு அலசல்

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என கூறியுள்ள தேர்தல் ஆணையம், அந்த அணிக்கு வில்-அம்பு சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதே நடைமுறை அதிமுகவுக்கும் பொருந்துமா என பரவலாக கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுக அதிகாரப்பூர்வமாக, எடப்பாடி பழனிசாமியின் வசம் செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சிவசேனா அதிமுக
சிவசேனா அதிமுக

சென்னை:சிவசேனா கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உட்கட்சி பிரச்னை வெடித்தது. இதனால் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வந்தனர். முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே பறிகொடுத்த நிலையில், 40 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார் ஷிண்டே. எனினும் இரு அணிகளும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடினர். இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.

இந்நிலையில் கட்சி சட்டவிதிகளின்படி, ஏக்நாத் ஷிண்டே தான் உண்மையான சிவசேனா என அறிவித்த தேர்தல் ஆணையம், வில்-அம்பு சின்னம் ஷிண்டேவின் அணிக்கே ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு கூட்டப்பட்ட சிவசேனா பொதுக்குழுவில், உத்தவ் தாக்கரே தலைவராக தேர்வானார். அப்போது தலைவர் பதவிக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஜனநாயத்துக்கு எதிராக கருதுவதாகவும், 2018ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு பதவி தொடர்பான தகவலும் ஆணையத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கட்சி விதிகளின்படி பார்த்தால், தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என அறிவித்த தேர்தல் ஆணையம், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவை அறிவித்துள்ளது.

அந்த வகையில் மொத்தமுள்ள 55 எம்எல்ஏக்களில், 40 பேரும், 19 எம்பிக்களில் 13 பேரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் அடிப்படையில்தான் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெயரும், சின்னமும் கிடைத்துள்ளது.

அதிமுகவுக்கு பொருந்துமா?:தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, தமிழ்நாட்டில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதிமுக யார் வசமாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தான், உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஒருவேளை அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், தற்போது சிவசேனா விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு நேரிடும் என கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் பதவி மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் 2021ம் ஆண்டு உட்கட்சி தேர்தலில், ஒரே வாக்கின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன. அடிப்படை உறுப்பினர் தான் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியும் மாற்றப்பட்டது. அதிமுகவை பொறுத்தவரை கட்சி பிரச்னைக்காக யாராவது நீதிமன்றம் சென்றால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்ற விதியும் உள்ளது. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படலாம்.

ஈபிஎஸ் வசம் செல்கிறதா அதிமுக?:ஒருவேளை சிவசேனா போல, பெரும்பான்மை அடிப்படையில் பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் வசம் அதிமுக செல்ல அதிக வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் 66 எம்எல்ஏக்களில் 62 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேரில் 3 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேரில், 2,501 பேரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

ஒரே ஒரு அதிமுக மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத்தின் ஆதரவு, பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. அதேநேரம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராத ஒன்று. எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையும் என்பது அனைத்து தரப்பினரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Feb 18, 2023, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details