தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2020, 9:32 AM IST

ETV Bharat / state

கரோனா பணியின்போது உயிரிழந்த அரசு அலுவலர்களுக்கான நிவாரணம் - முன்மொழிவை அனுப்ப அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் தொற்று நோய் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர் தனது பணி காலத்தில் இறந்தது தொடர்பாக முன்மொழிவை அனுப்ப கோரி பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

TN secretariat press release
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்

இது தொடர்பாக முனைவர் ந . வெங்கடாசலம், இ.ஆ.ப, இயக்குநர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வநாயகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கரோனா வைரஸ் தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் யாராவது எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்களது (பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து) துறையில் கரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பணியாளர் குடும்பத்துக்கு அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்று தருவதற்கு முன்மொழிவு அரசுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு ஏதுவாக கீழ்கண்ட ஆவணங்களுடன் தங்களது முன்மொழிவை உடனடியாக அனுப்பி வைத்திட தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முன்மொழிவை அனுப்புவதற்கு தேவையான ஆவணங்களின் விவரம்:

1. கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டார் என்பதற்கான சான்று

2. கரோனா தொற்று நோய் காரணமாக நோய் பிடியில் இருந்ததற்கான மருத்துவ சான்று

3. கரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பின் அதன் நகல்

4. இறப்பு சான்று நகல்

5. வாரிசு சான்றிதழ் நகல்

6. குடும்ப அட்டை நகல்

மேலும், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி முன்மொழிவுகளுடன் அனுப்பி வைத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவிலிருந்து 85 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர்' - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details