இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ் அமைப்புகளும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்திலிருந்து விலகுமாறு முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதியை கேட்டுக் கொண்டார். இதனால், விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று (அக். 19) பீட்சா திரைப்படம் வெளிவந்து எட்டாவது ஆண்டு நிறைவுபெற்ற நிலையில், அது குறித்து தனது நினைவுகளை விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதில் @ItsRithikRajh என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து கமெண்ட் செய்திருந்த நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து ட்வீட் செய்துள்ள தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார், ”மனிதர்களா இவர்கள்? இது போன்று வன்மங்களை கக்கும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து முதலமைச்சர், சென்னை காவல் துறையை டாக் (Tag)செய்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டங்கள்!