உள்ளாட்சி தேர்தலில், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் திமுக அதை சந்திக்க தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தெடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர்.
அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களிடம், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று கூறியுள்ளனர். இவர்கள் அதுபோல் கூறினாலும், உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையாகவே இந்த சந்திப்புகள் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.