எரிவாயு உருளை (சிலிண்டர்) விலை இந்த மாதம் மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது. ரூ.660இல் இருந்து தற்போது ரூ.710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல் டீசல் விலையைப் போல சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்திவருகிறது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளை விலை கடந்த ஒன்றாம் தேதிமுதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 660 ரூபாயாக அதிகரித்தது.
தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரித்து 710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை 15 நாள்களில் 100 ரூபாய் அதிகரித்திருப்பது சாமானிய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கரோனா ஊரடங்கால் தேநீர்க்கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் வியாபாரிகளும், ஏழை மக்களும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை தற்போது அதிலிருந்து அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் நிலையில், ஒரே மாதத்தில் சிலிண்டர் விலையை மத்திய அரசு இரண்டுமுறை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகளும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.