இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால், வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை, ரயில், பஸ் போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் முலமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேபோல் வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, மத்திய அரசு கடந்த 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று தவிப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி முதற்கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதில், துபாய், குவைத் மற்றும் மலேசியாவிலிருந்து இயக்கிய 4 சிறப்பு விமானங்களில் 710 பேர் அழைத்து வரப்பட்டு தனியார் கல்லூரி மற்றும் தனியார் விடுதிகளில் 14 நாள்கள் கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், மஸ்கட்டிலிருந்து வந்த விமானத்தில் 27 குழந்தைகள், 50 பெண்கள் உள்பட 183 பேர் வந்தனர். இவர்களுக்கும் விமானி மற்றும் ஊழியர்களுக்கும் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அலுவலர்கள் சோதனை செய்தனர்.