தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக வரும் அக்டோபர் 24 முதல் 26 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் கூடுதலாக 4,265 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் உட்பட 10 ஆயிரத்து 646 பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கடந்தாண்டு தீபாவளியைப் போலவே இந்தாண்டும் ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, ஆந்திரா செல்லும் தமிழ்நாடு, ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகரப் பேக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், மதுராந்தகம், போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தனி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.