சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்போம்" என்கிற தங்களின் தேர்தல் வாக்குறுதியை ஆட்சி பொறுப்பேற்ற சில மணித்துளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றினார். இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளதாவது:
பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் அடிக்கும் தனியார் நிறுவனங்கள்: தலையிடுமா தமிழ்நாடு அரசு?
சென்னை: தனியார் நிறுவங்களின் பால் கொள்முதல் விலை குறைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடுமா என பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
”தமிழ்நாட்டில் தினசரி பால் தேவையில் 16 விழுக்காடு மட்டும் பூர்த்தி செய்யும் ஆவின் பால் விற்பனை விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு, எங்களது வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் விலை குறித்து கவனிக்கத் தவறியது வருத்தமளிக்கிறது.
ஏனெனில் ஆவின் நிறுவனம் (ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாய்) கொள்முதல் செய்கின்ற விலையைவிட குறைந்த விலை கொடுத்து பாலினை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள், பால் விற்பனை விலையை மட்டும் ஆவின் பாலினைவிட லிட்டருக்கு 10 ரூபாய்க்கும் கூடுதலாக நிர்ணயம் செய்து விற்பனை செய்வதால் 84 விழுக்காடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கரோனா ஊரடங்கில் வணிக ரீதியிலான பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதைக் காரணமாக வைத்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. ஆனால், பால் விற்பனை விலையை ஒரு ரூபாய் கூட குறைக்க எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களும் முன் வரவில்லை.
இந்நிலையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து உத்தரவிட்டதால் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் பாதிக்கப்படும் என்பதாலும், கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் வணிக ரீதியிலான பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை காரணமாகவும் தங்களின் வருமானத்திற்கு பாதிப்பு வரும் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்களும், பால் விற்பனையில் ஈடுபட்ட வரும் பன்னாட்டு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் மே 11ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் அதிகமாக தன்னிச்சையாகக் குறைத்திருக்கின்றன.
இதன் மூலம் தற்போது தழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலை குறைந்தபட்சம் ஒரு லிட்டர் 17 ரூபாய் முதல் அதிகபட்சமாக 26 ரூபாயாக இருக்கிறது. கரோனா ஊரடங்கைக் காரணம்காட்டி பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் கடுமையாகக் குறைத்ததால் மாடுகளுக்கு தீவனம் வாங்கவும், மருத்துவ செலவுகள் செய்திடவும் முடியாமல் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த பால் கொள்முதல் விலை குறைப்பால் கூடுதல் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதியும், பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களின் நலன் கருதியும் தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கடந்த அதிமுக அரசிடம் எங்களது சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மக்கள் நலன் கருதி நல்லெண்ண அடிப்படையில் செயல்படும் தங்களின் தலைமையிலான அரசாவது, தமிழ்நாட்டில் தினசரி தேவையில் 84 விழுக்காடு தேவையைப் பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை குறித்து கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.