தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிப்பட்ட சித்தாந்தங்களை தீர்ப்புகளில் திணிக்கக்கூடாது: சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை: நீதிபதிகள் தங்களது தனிப்பட்ட சித்தாந்தங்களை தீர்ப்புகளில் திணிக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

cpm balakrishnan

By

Published : Aug 23, 2019, 8:04 PM IST

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,,''சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “கிறிஸ்துவ மிஷனரிகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.

நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்வதக் கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது; பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கவும், அதிலிருந்து அப்பாவி ஆண் இனத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும்” இவ்வழக்கிற்கு சற்றும் சம்பந்தமில்லாத விதத்தில் கருத்து தெரிவித்ததுடன், உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

இவரது கருத்திற்கு பொதுமக்கள், பெண்கள், சிறுபான்மையினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு அனைத்துப்பகுதியினர் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டு, திரும்ப பெற வேண்டுமென வற்புறுத்தி முறையீடு செய்ததன் காரணமாக வேறுவழியின்றி நீதிபதி வைத்தியநாதன் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை தனது தீர்ப்புரையிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் முதல் சம்பவம் அல்ல, ஏற்கனவே பல வழக்குகளில் வழக்குகளுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை நீதிபதிகள் நீதிமன்றத்தில் தெரிவிப்பதும், தங்களது தீர்ப்புரையில் குறிப்பிடுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இத்தகையப் போக்கு நீதித்துறையின் மாண்புகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை அரித்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

மேலும் நீதிபதிகள் இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் தனிப்பட்ட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையும், கருத்துக்களையும் கொண்டிருப்பது அவர்களுக்கான உரிமையாகும். ஆனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்புகள் வழங்கும் போது சட்டநெறிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டுமென்பதே அவர்களது கடமையாகும். இந்த நடைமுறையினை நீதிபதிகள் கடைபிடிக்க வேண்டுமெனவும், தலைமை நீதிபதி இதனை இதர நீதிபதிகளுக்கு வழிகாட்டிட வேண்டுமென்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details