தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக சென்னை கோடம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அப்போது நல்லகண்ணு பேசுகையில், "தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை மக்கள் ஆதரிக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த வேட்பாளர். தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் நம் கூட்டணி வெற்றிபெறும் என்று உறுதி ஆகிவிட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை இந்தியாவின் முற்போக்கு கொள்கை, மக்களை அடிப்படையாக வைத்து கொண்டுவந்தது ஆகும்.
அதிமுக ஆட்சி ஊழலில் மூழ்கி உள்ளது. எதிர்காலம் பற்றி கவலை இல்லாமல் மோடி, பாஜக சொல்வதை செய்துவருகின்றனர். அவர்கள் கூட்டணிக் கொள்கை இல்லா கூட்டணி" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய டி.ராஜா, "மோடி தனக்கு மீண்டும் அதிகாரம் வேண்டும் என்று மக்களிடம் பேசிவருகின்றார். நானும், பல தலைவர்களும் அவருக்கு மீண்டும் அதிகாரம் கூடாது என்று பேசிவருகின்றோம். வருகின்ற தேர்தல் இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான தேர்தல். இந்திய நாட்டின் ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும்.
இன்று ஜனநாயகம் பேராபத்தில் உள்ளது. மக்களிடம் உள்ள நல்லிணக்கம் உடைக்கப்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் பாஜகவே காரணம். மோடி வாய் சவடால் விடுகிறாரே தவிர உண்மையில் மக்கள் மீது அக்கறை இல்லாத பிரதமர்" என தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்