சென்னை ஜாபர்கான் பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவதாகக் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்ததைக் கண்டுபிடித்து காவல் துறையினர் அவரை பிடிக்க முயன்றபோது ஆட்டோ ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றார். பின்தொடர்ந்த காவல் துறையினர் ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜி மற்றும் ஈஸ்வரி எனத் தெரியவந்தது. ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் இரண்டு அரிவாள், ஒரு கிலோ 150 கிராம் போதைப் பொருள் இருந்தது. இதனைப் பறிமுதல் செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையில் அடைத்தனர்.
இவர்களுக்கு போதைப்பொருள் எப்படிக் கிடைத்தது? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.