நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில், கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியபோதிலும், சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது.
சென்னையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 94 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்படோரின் பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தண்டையார்பேட்டை - 77 பேர், ராயபுரம் - 189 பேர், திரு.வி.க. நகர் - 169 பேர், தேனாம்பேட்டை - 85 பேர், திருவொற்றியூர் - 16 பேர், அடையாறு - 19 பேர், பெருங்குடி - 9 பேர், ஆலந்தூர் - 9 பேர், வளசரவாக்கம் - 30 பேர், சோழிங்கநல்லூர் - 2 பேர், அண்ணாநகர் - 73 பேர், கோடம்பாக்கம் - 63 பேர், மணலி - ஒருவர், மாதாவரம் - 4 பேர், அம்பத்தூர் - 20 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, சென்னையில் கரோனா தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் பார்க்க: நீட் தேர்வு: மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு செயலர் பரிசீலிக்க உத்தரவு