தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவை விரைந்து கட்டுப்படுத்துவது தொடர்பாக, 15 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

corona
corona

By

Published : Jul 7, 2020, 8:49 AM IST

தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 6) ஒரே நாளில் 3,783 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,747 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் பாதிப்பு 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 571ஆக உள்ளது.

இதனிடையே, சென்னையைத் தாண்டி மற்ற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கரோனா நோயை விரைந்து கட்டுப்படுத்துவது தொடர்பாக, 15 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக பின்பற்றவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் காவல் துறை தலைமை தலைவர் ஜே.கே. திரிபாதி, கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details