சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கோடம்பாக்கம், அசோக் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு முகக்கவசம் மற்றும் கரோனா வைரஸ் சம்பந்தமான பயன்படுத்தும் பொருட்களை சேகரிப்பதற்கும், 14 நாட்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு ஐந்து பிளாஸ்டிக் பைகள் ஒரு வீட்டுக்கு அளித்து வருகிறோம்.
மேலும் 14 நாட்கள் சேகரிக்கும் கழிவுகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிவுகள், தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் கழிவுகள் என 5-6 டன் தினமும் சேகரித்து மணலி பகுதியில் இருக்கும் கழிவுகள் எரிக்கும் மையத்தில் 1,100 டிகிரியில் எரிக்கிறோம். இதுவரை 300 டன்னுக்கும் மேற்பட்ட கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை முழுவதும் 7,69,467 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 2,87,737 நபர்கள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 4,37,166 நபர்கள் தொடர்கண்காணிப்பில் உள்ளனர்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நோய்த்தொற்று குறைந்துவிட்டது என எங்கள் பணிகளை குறைத்துக் கொள்ளமாட்டோம். எங்கள் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். மேலும் 81 மார்க்கெட் பகுதிகளில் 32 தனிக்குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்குக் கண்டிப்பாக சீல் வைக்கப்படும்.