கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களில் நேரடி அரசு நியமனம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் என இரு வகைகளாக உள்ளனர். இவர்கள் குடிநீர் வடிகால் வாரியத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியாற்றுகிறார்கள்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர் வரை அனைவருக்கும் 50 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசும் இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ”கரோனோ போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் பரவும் இந்த இக்கட்டான நிலையிலும் தூய்மைப் பணி செய்யும் இவர்களுக்குப் போதிய நோய் தடுப்புச் சாதனங்களோ, உயிர்காக்கும் சாதனங்களோ வழங்கப்படுவதில்லை என்பதால், காப்பீடு செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காப்பீடு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகள் தமிழ்நாடு அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஆராய்ந்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு ஒப்பந்த பணியாளர்களுக்கும் பொருந்துமா என்பது தெளிவாக இல்லை என்பதால் அதுகுறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.