தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துவருகிறது. அதிமுக, திமுகவில்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல்செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பிப்ரவரி 17 முதல் விருப்பமனு பெற தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் கட்சியினரிடமிருந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 25ஆம் தேதிமுதல் மார்ச் 5ஆம் தேதிவரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
விருப்ப மனு 100 ரூபாய்
விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் பொதுத் தொகுதிகளுக்கு 5000 ரூபாய், தனித் தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் 2,500 கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்தலுக்குத் தயாரான காங்கிரஸ் விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்திசெய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடைத் தொகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TAMILNADU CONGRESS COMMITTEE) என்ற பெயரில் வரைவோலையாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும், அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.