சென்னை:அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், 'ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியுள்ளார்.
இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய். அதே போல் திருத்தங்கல் பகுதியில் ரூ. 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ. 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ. 1 கோடிக்கு அதிகமாகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ. 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.
நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக்குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமெனவும், நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கு, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளார்.
இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு வாதம்
அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம். நிர்மல் குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல் கான், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை நடத்தத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஈமு கோழி நிறுவனம் பணமோசடி வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை