தமிழ்நாடு முழுவதும் தற்போது வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். அப்போது பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை உடனடியாக கண்டறிந்து பாதிப்புகளைத் தவிர்க்கவும், மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு மையங்கள் தொடங்கவும், மின் கம்பங்கள் மற்றும் பகிர்மான நிறுவனத்தால் மின் கம்பங்களில் பாதிப்பு ஏற்பட்டால் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணையப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கவும், அனைத்து நீர் தேக்கங்களையும் தொடர் கண்காணிப்பில் வைக்கவும், மருத்துவமனையில் போதுமான மருந்துகள் கையிருப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.