சென்னை: சென்னை சிஐடி காலனியைச் சேர்ந்த திருமங்கலம் கோபால் - சரோஜினி ஆகியோரின் மகன் ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது - வகிலாபானு ஆகியோரின் மகள் சஜீக்கும் கலப்புத் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்திருத்த முறைப்படி இன்று நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற நிலையை உருவாக்கியது, நமது அரசு. இந்த திருமணம் சீர்திருத்த திருமணம் மட்டும் அல்லாமல், இந்தத் திருமணம் கலப்புத் திருமணம். அது மட்டும் அல்ல, காதல் திருமணமாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக, நிழல் போல் தொடரக் கூடிய பாதுகாவலராக இருந்தவர் கோபால். அதேபோல், உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய மருத்துவராகவும் கோபால் இருந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கண் அசைவிலே அவர் எண்ண சொல்லப் போகிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிந்து கொண்டு செய்யக் கூடியவர்தான் கோபால்.
மயிலாப்பூரில் 2 திருமணங்களை நடத்தி விட்டு, இந்த திருமணத்திற்கு காரில் வந்து கொண்டு இருந்தேன். அப்போது காேபாலை பற்றி காரில் பேசிக்கொண்டு வந்தேன். நான் பேச நினைத்ததை அப்படியே நேரு இங்கு பேசி விட்டார். முந்திரி கொட்டை மாதிரி என்று சொல்லுவார்கள், அதுபோல. நேரு எப்போதும் ஸ்பீடு, எல்லோரும் சொல்வதற்கு முன்னர் அவர் சொல்லிவிட வேண்டும். அவரிடம் ஏன் கூறினோம் என பீல் பண்ணிணேன். அந்த அளவிற்கு ஆர்வத்துடன் எடுத்துச் சொன்னார்.
1970 - 1971ஆம் ஆண்டில் மதுரையில் இளைஞர் அணி துவங்கப்பட்ட நேரத்தில், என்னுடன் இருந்தவர் திருமங்கலம் கோபால். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுச் சென்றபோது திண்டுக்கல் இடைத்தேர்தல் கலவரத்தில், என்னை பாதுகாத்தவர் திருமங்கலம் கோபால். தனது உயிர் பிரிகிற வரையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியோடு இருந்தவர் திருமங்கலம் கோபால்.
கட்சிக்காக உழைத்து எப்போதும் மிடுக்காக இருப்பார், கோபால். அதுதான் திமுகவை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. கோபாலின் 3 மகன்கள் திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்தார். 4வது மகனின் திருமணத்தை நான் நடத்தி வைத்துள்ளேன். அவரின் பேரக்குழந்தைகளின் திருமணத்தையும் நான்தான் நடத்தி வைப்பேன் என நம்புகிறேன்.
முதன் முதலில் இளைஞர் அணி துவக்கப்பட்டது முதல் நகரப் பகுதிகள், ஒன்றியப் பகுதிகள், கிராமப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். அப்போது எனக்கு துணையாக வந்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உயிர் பிரியும் வரையில் 2015ஆம் ஆண்டு வரையில் உடன் இருந்தவர் கோபால்.