தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2021, 4:05 PM IST

ETV Bharat / state

'International day against Women Violence': முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்

'International day against Women Violence' தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனால் உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், பொது மக்களும் இதனைப் பின்பற்றி விழிப்புணர்வுகளை பல்வேறு வலைதளங்கள் வாயிலாகப் பரப்பி வருகின்றன. ஆகையால், இதை தமிழ் நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டார்.

முதல்வரின் காணொலி செய்தி
முதல்வரின் காணொலி செய்தி

சென்னை:இன்று(26/11/2021) 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள்' அதை விழிப்புணர்வு மூட்டும் வகையில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் கணொலி செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியது கீழே வருமாறு:

"சமீபத்தில் நடந்த பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது...!":

சமீபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காணொலியில் அவர் குறிப்பிட்டுப் பேசுகையில், 'பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும்போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது'

'விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது..!':

அறமும், பண்பும் அதிகம் பேசப்படும் சமூகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும்,தொழில் நுட்பமும் வளர்ந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான சம்பவங்களும் நடப்பது வெட்கித்தலைகுனிய செய்கிறது.

இதைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. இருக்கவும் கூடாது. அந்தப் பிஞ்சு குழந்தைகள் 'விட்றாதீங்கப்பா என்று கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது..!' என்று தன் மன வேதனையை காணொலியில் பதிவு செய்தார்.

'பல சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன':
'பெண்கள் பள்ளியில், கல்லூரிகளில், அலுவலகத்தில், பொதுவெளியில் எனப் பல்வேறு இடங்களில் வன்முறைகளுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆனால், அதில் சில சம்பவங்கள் தான் வெளிவருகிறது. மற்றவை மறைக்கப்படுகின்றன’ என்று கூறினார்.

'மனசாட்சி அற்ற மனிதர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்...!':

இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் மனசாட்சியற்றவர்கள் என்பதை கலைஞர் எழுதிய வரிகளை வைத்து மேற்கோடிட்டு காட்டினார்.

'மனசாட்சி உறங்கும் சமயம் பார்த்துத்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது', என்று கலைஞர் அறை நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு திரைப்படத்தில் எழுதியிருந்தார். அவ்வாறு இருக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசி ஒரு பொருளும் இல்லை.

பெண்களும்,குழந்தைகளும் புகார் தர முன்வரவேண்டும்:

'பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டலுக்கு எதிராக நிறையச் சட்டங்கள் உள்ளன. அதில் அவர்கள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நான் இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். பெண்கள் அனைவரும் அவர்களுக்கு எதிரானப் பாலியல் வன்முறைகளைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தர முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

வெளிக்கொண்டு வருவதில் எந்த தயக்கமும் அவசியமில்லை:

'எல்லோரும் புகார்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகின்றீர்கள். பள்ளியின் பெயர் கெட்டுவிடுமோ, கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமோ, நிர்வாகத்திற்கு பங்கம் ஏற்படுமோ என்று தயக்கம் கொள்ள அவசியம் இல்லை. அப்படி செய்வது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகி விடும்'என்று,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

உளவியலையும் பாதிக்கிறது:

'பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் பெண்கள், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். தூக்கமின்றிப் போகிறார்கள்.

பெரும் அச்சத்திற்கு உள்ளாகிறர்கள். இறுதியில் அவர்களின் எதிர்காலமே சிதைந்து விடுகிறது.

இப்படிப்பட்ட சரிவுகளில் இருந்து பெண் குழந்தைகளை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது'என்று முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

'குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இந்த அரசு தயங்காது...!':

'பாலியல் தொல்லைகள் குறித்தப் புகார்களுக்கு அரசு உடனே நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை,மற்ற அனைத்துப் பிரச்னைகளை விட முக்கியமான ஒன்றாக தமிழ்நாடு அரசு கருதுகிறது.

அதை நீங்களே தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஆகையால் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது'என்றார் முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின்.

மேலும்,பெண்களுக்கும்,பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க வகுத்த திட்டங்களையும், தீர்வுக்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டார். அவை கீழே வருமாறு:

* குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது.

எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

* அதேபோல் சென்னை டிபிஐ அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கல்வித் தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். பாலியல் வன்முறை தொடர்பாக மாணவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு, தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

* குழந்தைகளின் பாதுகாப்பினை பள்ளிகள் உறுதி செய்ய சுய தணிக்கைப் பட்டியல் பள்ளிக் கல்வித்துறையால் கடைபிடிக்கப்படுகிறது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு தலைமையகத்தில் இணையதளக் குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

* பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக நிதியம் ஒன்று செயல்படுகிறது.

* போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

மேலும், 4 மாவட்டங்களில் நிறுவ ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர உத்தரவிட்டுள்ளேன்.

* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

* குழந்தைப் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்படுவதற்கு, இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாடு மாநில குழந்தை பயிற்சி மையம் யுனிசெப் (UNICEF)உதவியுடன் செயல்பட்டு வருகிறது.

* குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

* தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண்.14417 குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

* சில நாட்களுக்கு முன்னால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்,

குழந்தைகளுக்கான கொள்கை - 2021 என்ற கொள்கைக் குறிப்பேட்டை தலைமைச் செயலகத்தில் நான் வெளியிட்டேன்.

ஒவ்வொரு குழந்தைகளையும் அனைத்துவிதமான சுரண்டல்களில் இருந்தும் வன்முறைகளில் இருந்தும் காக்கும் அறிக்கையாக அது அமைந்துள்ளது.

அதன் பின்,பெண் பிள்ளைகளை பெற்றோருக்கும், பள்ளி, கல்லூரி, நிர்வாகங்களுக்கும் சில அறிவுரைகள் கூறினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

'ஒரே வீட்டிற்குள் தனி, தனித்தீவாக வாழ வேண்டாம்..!':

'பெற்றோர் தங்களின் பிள்ளைகளிடம் என்றும்; எளிமையாகவும், இனிமையாகவும் பழக வேண்டும்.

அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதத்தில் நம்பிக்கை அளிக்க வேண்டும். ஒரே வீட்டில் தனி,தனித்தீவாக வாழ வேண்டாம்' என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

'தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்...!”:

”ஒரு பெண் பிள்ளை தற்கொலை செய்கிறாள் என்றால், அவள் இந்தச் சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாடி விட்டு மரணம் அடைகிறாள் என்பது பொருள்' என்று கூறிய முதலமைச்சர், 'வாழ்ந்து தான் போராட வேண்டும்', 'வாழ்ந்து காட்டுவதின் மூலமாக தான் அந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும்' என்று கூறி பெண்கள் யாரும் இனி தற்கொலை செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

'முதலமைச்சராக மட்டும் இல்லை, ஒரு தந்தையாக கேட்கிறேன்...!':

'இதை முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தந்தையாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, ஒரு சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம்! நான் இருக்கிறேன்! அரசாங்கம் இருக்கிறது! வணக்கம்!' என்று கூறி காணொலியை நிறைவு செய்துகொண்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதையும் படிங்க:அரசியலமைப்பு மீதான தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது - மோடி

ABOUT THE AUTHOR

...view details