தமிழ்நாடு முதலமைச்சர் மார்ச் 24ஆம் தேதி, சட்டப்பேரவையில், விதி110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநர்களுக்கு ஏற்பட்ட வேலையிழப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படும்.
நலவாரியத்தில் பதிவு செய்த 12,13,882 தொழிலாளர்களும், ஓட்டுநர் வாரியத்தில் பதிவு செய்த 83,500 தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கவும், இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் கட்டுமானத்தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 14,57,526 குடும்பங்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1லி சமையல் எண்ணெய் வழங்கவும் உத்தரவிட்டது.
வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிந்து ஊரடங்கின் காரணமாக தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வருவாய் இழந்து தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களின் நிலை கருதி, 1,34,569 தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கிட ஆணையிட்டார்.
கட்டுமானம், ஓட்டுநர் நலவாரியத்திற்கு வழங்கிய பணப்பயனைப்போன்று, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம், சலவைத் தொழிலாளர்கள்
நல வாரியம், முடி திருத்துவோர் நல வாரியம், தையல் தொழிலாளர்கள் நல வாரியம், கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம், பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் நல வாரியம், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலாளர்கள்நல வாரியம், ஓவியர்கள் நல வாரியம், பொற்கொல்லர் நல வாரியம், மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம், வீட்டுத் தொழிலாளர்கள் நல வாரியம், விசைத்தறி தொழிலாளர்கள் நல வாரியம், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் நிறுவனங்கள் தொழிலாளர்கள் நல வாரியம், உணவு சமைக்கும் தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய 15 அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கிட அறிவிக்கப்பட்டது. அதன்படி, 14,07,130 தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு 17 வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கிட ரூ.270.05 கோடியும், பிற மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும், கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்டநிறுவனங்களில் பணிபுரியும் பிறமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்க ரூ.101.73 கோடியும் செலவிட அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்புகளின்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மூலம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம் அவரவர் வங்கிக்கணக்கில்நேரடியாக செலுத்தப்பட்டுவருகிறது.
மேற்கண்ட 17 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து வங்கிக்கணக்கு விபரங்களை சமர்பிக்காத அமைப்பு சாராத் தொழிலாளர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாக அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல்மூலமாகலோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தொழிலாளர்களின் வங்கிக் கணக்கு விவரம் கிடைத்த பிறகே மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலரால் அவர்களின் கணக்கில் பணம் செலுத்த இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது.