சென்னை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி சென்னையில் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டில் சேர்வதற்கு 40ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். வேளாண்மைப்படிப்புகளில் 6ஆயிரத்து 600 இடங்கள் உள்ளது. அதில், பல்கலைக் கழகம் மற்றும் அரசுக் கல்லூரிகளில் 100 சதவீதம் இடங்களும், பல்கலைக் கழகத்தின் இணைப்புப்பெற்ற சுயநிதிக்கல்லூரிகளில் ஐசிஎஸ்ஆர் அங்கீகாரம் பெற்றக்கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளது.
டயர் 2 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. அந்தக் கல்லூரிகளிலும் அரசின் ஒதுக்கீட்டு இடங்களான 65 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 35 சதவீதம் இடங்களுக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை 2 கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. மேலும், 2 கட்டமாக நேரடியாக மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு 4 நாட்களில் நடத்தப்பட்டு, வரும் மாணவர்களைச் சேர்த்து விடுவோம்.
வேளாண்மைப் படிப்புகளில் நடப்பாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் தான் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முதலில் புத்தாக்க வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தான் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அகில இந்திய அளவிலும் வேளாண்மை படிப்புகள் தற்பொழுது தான் தொடங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை 2023-24ஆம் கல்வியாண்டில் அதிகரிக்கவும், முன்கூட்டியே முடிக்கவும் புதியத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஒரு மாதம் பெறப்படும். அதனைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் தயார் செய்து அறிவிக்கப்படும்.