சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திடீரென ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால் ஜனவரி 20ஆம் தேதி தேர்தலை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை சென்னை மாநகர காவல் துறை நிராகரித்துவிட்டது. எனவே உரிய பாதுகாப்பு வழங்கும்படி காவல் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்குப் பார்வையாளரை நியமிக்கத் தொழிலாளர் நலத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் அனுமதி வழங்கினால் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி தனது உத்தரவில், இது குறித்து காவல் துறை, சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி, தொழிலாளர் நலத் துறை பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:'திட்டங்கள் அறிவிப்பார்.. ஆனால் செயல்படுத்த மாட்டார்' - மு.க.ஸ்டாலின் மீது சீமான் குற்றச்சாட்டு