சென்னை:சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி பணிமனை இன்றும் (நவம்பர் 25), நாளையும் (நவம்பர் 26) நடைபெறுகிறது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 680 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
இதன் தொடங்க விழா நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அன்பில் மகேஷ், "படிப்பைக் காட்டிலும் விவாதப் பொருளாக பாலியல் வன்முறை இப்போது மாறியுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோராக இருக்கின்றனர். பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் (1098, 14417) மட்டும் கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என எண்ணாமல், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை, கோவை என எங்கு நடந்த செயலாக இருந்தாலும் குற்றம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகள், வகுப்பறைகள், புத்தகங்களின் முகப்பில் புகார் எண் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், எல்லா துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறையின் மீது மிகுந்த அக்கறைகொண்டவர்" என்று தெரிவித்தார்.