அண்மையில் சமூக வலைதளத்தில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன்-சிறுமி உரையாடிக் கொள்ளும் காணொலிகள் வைரலானது. இந்நிலையில், இவற்றைப் பார்க்கும் சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு கடலூர் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சைபர் காவல் துறையினரின் உதவியோடு இந்தக் காணொலிகளின் ஐபி முகவரி மூலமாக சிறுவன், சிறுமி இருவரும் கடலூரில் வசிப்பதை கண்டறிந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு அலுவலர்கள், கடலூர் காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு முதலில் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகி சரண்யா, கடலூர் மாவட்ட அலுவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் சிறுமியின் பெற்றோரிடம் மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமி, சிறுவனின் தூண்டுதலின் பேரில் புகழ் பெறுவதற்காக இதை செய்ததாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாதிப்பை உணர்ந்த அவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
தற்போது சிறுமியின் இந்த வீடியோவை பலரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் சிறுவன் வீட்டிலும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஆன்லைன் மோகத்தில் அதிக லைக்குகள் கிடைக்கும் எனவும், பிரபலமாகலாம் என்ற ஆசையிலும் சிறுவர் சிறுமியர் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்று பாதிக்கப்படும் சிறுவர்-சிறுமியர்களை காப்பகத்திற்கு அழைத்துச் சென்று நல்வழிப்படுத்த சட்ட வழிவகை உள்ளதையும் அலுவலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:நெல்லை அருகே ஒருவர் வெட்டிக் கொலை!