சென்னை:தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 4) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீர்வளத்துறை சார்பில் முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.9.50 லட்சம் மதிப்பிலான 6 செயற்கைகோள் அலைபேசிகளை வழங்கினார்.
முல்லை பெரியாறு அணைக்கு படகில் 14 கீ.மீ தூரம் பயணம் செய்யும் போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு செயற்கைகோள் அலைபேசி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 6 எண்ணிக்கையிலான செயற்கைகோள் அலைபேசிகள் மற்றும் ஒரு வருட சேவைக் கட்டணம் ஆகியவற்றிற்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வலைபேசிகள் வாயிலாக செயற்கைக்கோள் கோபுர சேவை இணைப்பு ஏதும் இல்லாமலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் சேவை பெற இயலும். இதன்மூலம், பெரியாறு அணை மற்றும் பெரியாறு அணைக்குரிய படகு பயணிக்கும் பாதையில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் எந்த நேரமும், எல்லா கால சூழ்நிலையிலும் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க இயலும்.
இதையும் படிங்க:'முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இரு முதலமைச்சர்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும்'