சென்னை: போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பி.கே.மூக்கையாதேவர் நூற்றாண்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத அரசியல் ஆளுமை மூக்கையா தேவர்.
ஒரே நேரத்தில் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் வென்றவர். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்ல முடியாது, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தலைமை வகித்தவர்" என கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் 6 இடங்களில் நிலக்கரி எடுப்பதற்கான அனுமதி வழங்கியுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு,
"நான் இருக்கும் வரை நிலக்கரியை எடுக்க விட மாட்டேன். ஏற்கனவே என்.எல்.சி விவகாரத்தில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீண்டும் ஆய்வுக்காக அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. அதற்கு எதிராக விவசாயிகளை திரட்டி எனது தலைமையில் கண்டிப்பாக போராட்டம் நடைபெறும்" என கடுமையாக தன் எதிர்ப்பினைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடும் வரை அரசு என்ன செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி போன்ற அமைப்புகள் இருந்தும் கல்லூரி வளாகத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது விசாரணை குழு அமைப்பது எந்த பயனும் தாரது" என கூறினார்.