சென்னை :சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கோயிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(டிச.1) விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பழமையான கோயில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள போதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இன்னும் எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை என்பதால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார். வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், "கோயிலுக்குள் எப்படி கட்டுமானங்கள் மேற்கொள்ள முடியும்?. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன?. தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதியை நியமித்து அறிக்கை கோரப்படும்.